டெல்லியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா இடம்பெற்றதாக கூறி, அவருக்கு தொடர்பில்லாத இரு வேறு காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பாலிவுட் பாடல் ஒன்றுக்கு அவர் நடனமாடுவது போல் இருக்கும் ஒரு காணொளியில், உண்மையில் இருப்பது சமூக வலைதள பிரபலம் சங்கீதா மிஸ்ரா என்பவர்.
மற்றொரு காணொளியில் அவர் வாள் சுழற்றி தற்காப்பு கலையில் ஈடுப்பட்டது போல் இருப்பது, மகாராஷ்டிராவைச் சேர்ந்த கலைஞர் பயல் ஜாதவ் என்று பூம் கண்டறிந்துள்ளது.
அனுபவம் வாய்ந்த கவுன்சிலரும், டெல்லியில் உள்ள ஷாலிமார் பாக் பகுதியிலிருந்து வந்த முதல் எம்.எல்.ஏ.வுமான பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் ரேகா குப்தா, கடந்த பிப்ரவரி 20ஆம் தேதியன்று டெல்லியின் முதலமைச்சராக பதவியேற்றார்.
முதல்வர் பதவிக்கு இது ஓர் ஆச்சரியமான தேர்வாக இருந்தாலும், 50 வயதான குப்தா, டெல்லி பாஜகவின் மிக முக்கிய புள்ளியாக இருந்து வருகிறார். மேலும், இதற்கு முன்பு டெல்லி மகிளா மோர்ச்சா பிரிவில் தலைமை பதவிகளை வகித்துள்ளார். அவர் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் அதன் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினராகவும் இருந்து உள்ளார்.
முதல் காணொளியில், பாலிவுட் பாடலுக்கு சில பெண்கள் நடனமாடுகிறார்கள். அவர்களில் ஒருவரை சுட்டிக்காட்டி, "இந்த மலிவான அமைச்சர்கள் சங்கிகளை தேடி அழைத்து வருகிறார்கள்..டெல்லியின் மலிவான அமைச்சர்... மன்னிக்கவும் டெல்லி" என்ற பதிவுடன் இந்த காணொளி வைரலாகி வருகிறது.
இரண்டாவது காணொளியில், ஒரு பெண் தனது பாரம்பரிய தற்காப்பு கலை திறன்களை வெளிப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது குப்தாவின் பழைய காணொளி என வைரலாகி வருகிறது. "ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ரேகா குப்தாவின் பழைய காணொளி. இப்போது அவர் டெல்லி முதல்வர்" என்று பதிவுடன் பகிரப்பட்டு வருகிறது.
உண்மைச் சரிபார்ப்பு
இந்த இரண்டு காணொளிகளிலும் இருப்பது ரேகா குப்தா அல்ல என்பதை பூம் கண்டறிந்தது. முதல் காணொளியில், பிரபலமான இன்ஸ்டாகிராம் கணக்கை கொண்ட ஒரு நடனக் கலைஞர் இடம்பெற்றுள்ளார். இரண்டாவது காணொளியில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த கலைஞர் தனது தற்காப்புக் கலை திறன்களை வெளிக்காட்டுகிறார்.
முதல் காணொளி - பாலிவுட் பாடலுக்கு நடனமாடும் பெண்
இந்த காணொளியை கீஃப்ரேம்களாகப் பிரித்து, கூகிள் லென்ஸைப் பயன்படுத்தி ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம். இதன்மூலம், நடனக் கலைஞர் சங்கீதா மிஸ்ராவின் இன்ஸ்டாகிராம் கணக்கை கண்டுபிடித்தோம். அதே காணொளியை மிஸ்ரா பிப்ரவரி மாதம் 17ஆம் தேதியன்று பதிவேற்றினார்.
தான் தனியாகவோ அல்லது நிகழ்ச்சிகளில் மற்ற பெண்களுடன் நடனமாடும் காணொளிகளை தவறாமல் பதிவேற்றும் மிஸ்ரா, இன்ஸ்டாகிராமில் 80,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.
இரண்டாவது காணொளி - வாளுடன் தனது தற்காப்புக் கலை வெளிப்படுத்தும் பெண்
தற்காப்புக் கலைஞரும் நடிகையுமான பாயல் ஜாதவின் சரிபார்க்கப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்ட காணொளியை நாங்கள் குறிப்பிட்ட வார்த்தைகள் கொண்டு ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தப்போது காண்டறிந்தோம்.
இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாதவ், பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடன கலைஞர் ஆவார். அவர் மராத்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.