மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில், அம்மாநிலத்தில் நடைபெறும் இந்து பண்டிகைகளில்போது வகுப்புவாத கலவரங்களைக் காட்டுவதாக சில புகைப்படங்கள் பகிரப்பட்டன. ஆனால், இது வகுப்புவாத கலவரங்களுக்கு தொடர்பில்லாத எட்டு பழைய புகைப்படங்களை ஒரு படத்தொகுப்பாக பகிரப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், மேற்கு வங்க மாநிலத்தில் முர்ஷிதாபாத்தில் நடந்த வகுப்புவாத வன்முறையில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். ஊடகச்செய்தியின்படி, மாநில காவல்துறையினர் இந்த அமைதியின்மைக்காக குறைந்தது 200 பேரை கைது செய்துள்ளனர். இப்பகுதியில் இன்னும் பதட்டமான சூழ்நிலை இருந்தாலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் அரசும் பாஜகவும், மாநிலத்தின் தொடர் வன்முறைக்கு காரணம் என ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டு இருக்கின்றனர்.
இந்து பண்டிகைகளின் போது இஸ்லாமியர்கள் வகுப்புவாத கலவரங்களை ஏற்படுத்தியதாகக் காட்டும் நோக்கில்,மேற்கு வங்க பாஜக-வின் அதிகாரப்பூர்வ கணக்கு ஒரு வகுப்புவாத பதிவைப் பகிர்ந்துள்ளதை பூம் கண்டறிந்துள்ளது. ஒன்பது படங்கள் கொண்ட இந்தப் பதிவில், வாகனங்கள் எரிதல், கல் வீச்சு மற்றும் வன்முறை ஆகியவை காட்டப்பட்டுள்ளது.
இது வகுப்புவாதத்தைத் தூண்டும் பதிவு என்ற சட்டப்பூர்வமான மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக, எக்ஸ் சமூகவலைதளம் @BJP4Bengal என்ற கணக்கை , இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகைப்படத் தொகுப்பு 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதியன்று வங்காளம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரு காப்ஷனுடன் பதிவிடப்பட்டது.ஆங்கில கூற்றில், "பண்டிகை என்பதெல்லாம் பார்ப்பதில்லை - பொருட்களை எரிக்க அவர்களுக்கு ஒரு காரணம் தேவை," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பதிவைப் பார்க்க இங்கே மற்றும் காப்பகப்படுத்தப்பட்ட பதிவைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
அதே படத்தொகுப்பு, அதே தவறான கூற்றுடன் ஃபேஸ்புக்கில் வைரலாகியுள்ளது.
உண்மை சரிபார்ப்பு
இந்த படத்தொகுப்பில் உள்ள ஒன்பது புகைப்படங்களில் எட்டு, 2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு தழுவிய போராட்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதை பூம் கண்டறிந்துள்ளது.
இந்த படத்தொகுப்பில் உள்ள ஒரு படம் மட்டுமே இந்து பண்டிகையின் போது நடந்த வகுப்புவாத வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையது. ராம நவமியின் போது வன்முறையைக் காட்டுவதாகக் கூறும் புகைப்படம், மேற்கு வங்காளத்தின் ஹவுராவில் நடந்த திருவிழாவிற்கான ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கலவரம் குறித்த செய்தி அறிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. இது 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த சம்பவம்.
மற்ற எட்டு புகைப்படங்களும் இந்து பண்டிகைகளுடன் தொடர்பில்லாதவை, அவை 2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் எதிர்ப்பு போராட்டங்களின் போது எடுக்கப்பட்டவை. எட்டு புகைப்படங்களில் மூன்று மட்டுமே மேற்கு வங்காளத்தில் எடுக்கப்பட்டவை. மீதமுள்ளவை உத்தரபிரதேசம் மற்றும் அசாமில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தின் எதிர்ப்பு போராட்டங்களைக் காட்டுகின்றன.
1. விநாயகர் சதுர்த்தியின்போது நடந்த வன்முறையைக் காட்டுவதாகக் கூறுப்படும் புகைப்படம்
கூற்று: விநாயகர் சதுர்த்தியின்போது நடந்த கலவரத்தில் ஒரு நபர், எரியும் போலீஸ் தடுப்பணைக்கு முன்னால் கைகளை உயர்த்தி நிற்கும் புகைப்படம்.
உண்மை சரிபார்ப்பு: இந்தப் புகைப்படம் மேற்கு வங்காளத்தில் எடுக்கப்பட்டது. அந்த மாநிலத்தின் ஹவுரா மாவட்டத்தின் சத்ரகாச்சி பகுதியில் நடந்த சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் நடந்த வன்முறையை காட்டுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதியன்று இந்திய செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (பிடிஐ) எடுத்த புகைப்படம் என தெரிவித்து பல ஊடகங்கள் வெளியிட்டன என்று பூம் கண்டறிந்தது.
2. சரஸ்வதி பூஜையின் வன்முறையைக் காட்டும் புகைப்படம்
கூற்று: எரியும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையுடன் போராட்டக்காரர்கள் கற்களை வீசுவதைக் காட்டும் புகைப்படம், மேற்கு வங்கத்தில் பரவலாகக் கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜையில் நடந்த கலவரம் என வைரலாகி வருகிறது.
உண்மை சரிபார்ப்பு: உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில், பரிவர்த்தன் சவுக் பகுதியில் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் மோதியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று பூம் கண்டறிந்துள்ளது. இந்தப் புகைப்படம் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதியன்று பிடிஐ எடுத்த புகைப்படம் என தெரிவித்து பல ஊடகங்கள் வெளியிட்டன.
3. தசரா வன்முறையைக் காட்டுவதாகக் கூறுப்படும் புகைப்படம்
கூற்று: இந்தப் புகைப்படம் முகத்தை மூடிய போராட்டக்காரர்கள் குழு ஒன்று, எரியும் வாகனங்கள் அருகில் இருக்க கற்களை வீசுவதை காட்டுகிறது. மேற்கு வங்கத்தில் இந்து பண்டிகையான தசரா பண்டிகையின்போது நடந்த வன்முறை என்று பகிரப்படுகிறது.
உண்மை சரிபார்ப்பு: இந்தப் புகைப்படமும் உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் எடுக்கப்பட்டது என்பதை பூம் கண்டறிந்தது. இந்தப் புகைப்படமும் சரஸ்வதி பூஜையில் வன்முறையைக் கூறிப் பயன்படுத்தப்பட்ட புகைப்படமும் ஒன்றே என்பதை நாங்கள் சரிபார்க்க முடிந்தது. இந்த புகைப்படம் அதிலிருந்து வெட்டப்பட்ட பதிப்பாகும். முழு புகைப்படம் அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா உட்பட பல ஊடகங்கள் சம்பவம் குறித்த அவர்களின் செய்தி அறிக்கைகளில் இப்புகைப்படத்தை வெளியிட்டன.
4. ஹோலி பண்டிகையின்போது வன்முறையைக் காட்டும் புகைப்படம்
கூற்று: போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தும், கற்களை வீசுவதுடன், அப்பகுதியில் புகை சூழ்ந்திருப்பதை இந்தப் புகைப்படம் காட்டுகிறது. இந்த புகைப்படம் மேற்கு வங்கத்தில் ஹோலி பண்டிகையின்போது வகுப்புவாத கலவரங்கள் என பகிரப்பட்டது.
உண்மை சரிபார்ப்பு: உத்தரபிரதேசத்தின் லக்னோவில் எடுக்கப்பட்டது என்பதை பூம் கண்டறிந்தது. இந்தப் புகைப்படம் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதியன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் வெளியிடப்பட்டது. அச்செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் எடுத்த இந்த புகைப்படம், அங்கு நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையாகும்.
5. தீபாவளியன்று நடந்த வாக்குவாத கலவரம் என கூறப்படும் புகைப்படம்
கூற்று: இந்தப் புகைப்படத்தில் காயமடைந்த போராட்டக்காரர் ஒருவரை மற்ற போராட்டக்காரர்கள் தூக்கிச் செல்கிறார்கள். இது தீபாவளியன்று மேற்கு வங்கத்தில் வகுப்புவாத வன்முறை நடந்ததாகக் கூறி வைரலாகியது.
உண்மை சரிபார்ப்பு: இந்தப் புகைப்படம் கர்நாடகாவின் மங்களூரில் எடுக்கப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதியன்று தி இந்து செய்தி நிறுவனம் வெளியிட்டது. இதில் காயமடைந்த அப்போதைய மங்களூரு மேயர் கே. அஷ்ரஃப். அவரை பாதுகாப்பாக இடத்திற்கு கொண்டு செல்ல, போராட்டக்காரர்கள் உதவி செய்கின்றன.
6. துர்கா பூஜையில் வன்முறையைக் காட்டுவதாகக் கூறும் புகைப்படம்
கூற்று: மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜையின் போது போராட்டக்காரர்கள் தடிகளுடன் ஆயுதம் ஏந்தி கற்களை வீசுவதை இந்தப் புகைப்படம் காட்டுகிறது. மேலும் இது வகுப்புவாத கலவரமாக வைரலாகிறது.
உண்மை சரிபார்ப்பு: இந்தப் புகைப்படம் மேற்கு வங்காளத்தில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது. மேற்கு வங்காளத்தின் ஹவுராவில் கோனா விரைவுச் சாலையைத் மறித்த போராட்டக்காரர்கள் குறித்து செய்தியில், உண்மையான புகைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதியன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.
7. ஹனுமன் ஜெயந்தியில் வன்முறையைக் காட்டுவதாகக் கூறும் புகைப்படம்
கூற்று: இந்த புகைப்படம், போராட்டக்காரர்கள் வாகனங்களை எரிக்கும் வன்முறை காட்சிகளைக் காட்டுகிறது. மேற்கு வங்காளத்தில் ஹனுமன் ஜெயந்தி கொண்டாட்டங்களில் வகுப்புவாத வன்முறை என்று பகிரப்படுகிறது.
உண்மை சரிபார்ப்பு: இந்தப் புகைப்படம் கர்நாடகாவின் மங்களூரில் எடுக்கப்பட்டது. அங்கு நடந்த சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த செய்தி அறிக்கையில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதியன்று வெளியிட்ட புகைப்படமாகும்.
8. சங்கராந்தி பண்டிகையின்போது நடந்த கலவரங்களைக் காட்டும் புகைப்படம்
கூற்று: மேற்கு வங்காளத்தில் சங்கராந்தி பண்டிகையின்போது போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைப்பதையும், சாலையை மறிப்பதையும் காட்டும் புகைப்படம் வைரலானது.
உண்மை சரிபார்ப்பு: இந்தப் புகைப்படம் அசாமில் உள்ள திப்ருகரில் எடுக்கப்பட்டது. இப்பகுதியில் சிஏஏ-வுக்கு எதிராகப் இப்பகுதியில் நடந்த போராட்டங்கள் குறித்து இந்தியா டுடே செய்தி வெளியிட்டபோது, இந்த புகைப்படத்துடன் வெளியிட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட இந்த புகைப்படம், போராட்டக்காரர்கள் பேருந்து முனையத்தை எரிப்பதை காட்டுகிறது.
மேலும், மேற்கு வங்க காவல்துறை எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் வைரலான படத்தொகுப்பு போலியானது என்று கூறியுள்ளது.