காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி வத்ரா வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடும் காணொளி சமூக ஊடக தளங்களில் ஒரு காணொளி வைரலாகி வருகிறது.
இந்த காணொளி, வக்ஃப் மசோதாவிக்கு எதிராக நடந்தது அல்ல என்றும், பணவீக்கம் மற்றும் பிற பொருளாதாரப் நெருக்கடிக்கு எதிராக கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த போராட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பதை பூம் கண்டறிந்துள்ளது.
வக்ஃப் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் நிறைவேற்றப்பட்டு கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது. இந்த மசோதாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆதரித்தாலும், இந்தியா காங்கிரஸ் கூட்டணி உட்பட எதிர்க்கட்சிகள் அதை எதிர்த்தன. சில முஸ்லிம் குழுக்களும் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் இந்த சட்டத்தை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கிடையில், சமூக ஊடக பயனர்கள் பிரியங்கா வக்ஃப் மசோதாவுக்கு எதிராகப் போராடுவதாக ஒரு பழைய காணொளியை தவறுதலாக தமிழிலும் ஆங்கிலத்திலும் பகிர்ந்தனர்.
எக்ஸ் தளத்தில் ஒரு பயனர், “தலைநகர் டெல்லியில் வக்ஃப் மசோதாவிற்கு எதிரான போரட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சகோதரி பிரியங்கா காந்தி அவர்கள்,” என்ற காப்ஷனுடன் இந்த காணொளி பகிரப்பட்டன.
உண்மைச் சரிபார்ப்பு
இந்த காணொளியை சில பிரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம். இந்த தேடுதல் ஆங்கில செய்தி சேனலான என்.டி.டி.வியின் செய்தி அறிக்கைக்கு அழைத்துச் சென்றது. அதில் வைரலான காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இந்தப் போராட்டத்தின் போது, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ராஷ்டிரபதி பவனுக்கு பேரணியாகச் சென்றனர். இருப்பினும், காவல்துறையினர் அவர்களை பாதியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
குறிப்பாக, போராட்டத்தின் போது, ராகுல் காந்தி, சச்சின் பைலட், கே. சி. வேணுகோபால் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம் குறித்த சமீபத்திய செய்திகளையும் நாங்கள் தேடினோம். ஆனால், உள்ளிருப்பு போராட்டம் குறித்த எந்த செய்திகளையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், காங்கிரஸ் கட்சி இந்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதியன்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ இர்பான் ஹபீஸ் லோன், வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு கட்சியின் எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்தச் சட்டம் மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சியின் மீதான தாக்குதல் என்று அவர் கூறினார். "நாங்கள் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறோம் என்பதை நாட்டுக்குக் கூற விரும்புகிறோம். இது மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சியின் மீதான தாக்குதல். இந்த வழியில் (கருப்புத் துணியுடன்), நாங்கள் எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறோம். நாங்கள் எங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து காண்பிப்போம்," என்று அவர் கூறினார்
காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊடகப் பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் கட்சி தற்போது உச்ச நீதிமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) 2019, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் (2005) உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை எதிர்த்துப் போராடி வருவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி வக்ஃப் திருத்த மசோதா 2025-யின் அரசியலமைப்புச் சட்டத்தை விரைவில் நீதிமன்றத்தில் எதிர்த்துப் போராடும் என்றும் அவர் கூறினார்.