டெல்லி முதல்வர் ரேகா குப்தா பதவியேற்ற 48 மணி நேரத்திற்குள், ஒரு கருப்பு நிற எம்ஜி குளோஸ்டர் என்ற சொகுசு காரை அவர் வாங்கியதாக கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக இருந்த காலம் முதல் வீடியோவில் காணப்படும் சொகுசு கார் டெல்லி முதல்வர் அலுவலகத்தால் பயன்படுத்தப்பட்டு வருவதாக பூம் கண்டறிந்துள்ளது. இது அதிஷி சிறிது காலம் முதல்வராக இருந்த போதும் பயன்படுத்தியிருக்கிறார்.
எக்ஸ் தளத்தில் வைரலாகும் இந்த வீடியோவை பகிர்ந்த ஒரு பயனர், ”பாஜக பதவி ஏற்ற 48 மணி நேரத்தில் சொகுசு காரில் வலம் வந்த டெல்லி பாஜக முதலமைச்சர். இவனுங்க தான் ஊருக்கு உபதேசம் செய்யறாங்க.” என்ற கருத்துடன் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இந்த காணொளி, சமூக வலைதளத்தில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வைரலானது.
இந்த காணொளி, சமூக வலைதளத்தில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வைரலானது.
உண்மைச் சரிபார்ப்பு
இந்தக் கூற்று தவறானது என்று பூம் கண்டறிந்துள்ளது. வைரல் வீடியோவில் உள்ள இந்த சொகுசு கார் 2022ஆம் ஆண்டு முதல் டெல்லி முதல்வர் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பின்னர் 2025 ஆம் ஆண்டு அதிஷியாலும், ரேகா குப்தா பதவியேற்பதற்கு முன்பும் பயன்படுத்தப்பட்டது என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்.
நாங்கள் முதலில் இந்த வைரல் வீடியோ இணையத்தில் தேடினோம். அதில் இந்த ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதியன்று ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் பதிவைப் பார்த்தோம்.
இந்த பதிவின் படி, பதவியேற்பு விழாவிற்கு ரேகா குப்தாவை அழைத்து செல்ல நியமிக்கப்பட்ட பாதுகாப்பு பணியாளர்கள் வந்தனர்.
மேலும், நாங்கள் குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கொண்டு தேடினோம். அப்போது, இந்த ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதியன்று என்.டி.டி.வி இந்தி செய்தி சேனலில் ஒளிபரப்பப்பட்ட இந்தக் காரைப் பற்றிய செய்தி அறிக்கையைக் கண்டறிந்தோம்.
பின்னர், 2022 ஆம் ஆண்டு முதல்வராக இருந்தபோது கெஜ்ரிவால் இந்த காரை பயன்படுத்தியதைக் காட்டும் செய்தி அறிக்கைகளில் வெளியிடப்பட்ட காட்சிகளையும் நாங்கள் கண்டுபிடித்தோம்.
இந்த ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதியன்று, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் காணொளி, டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தனது ராஜினாமாவை சமர்ப்பிக்க அதே நம்பர் பிளேட் கொண்ட காரில் அதிஷி புறப்படுவதை காட்டுகிறது.