பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை ஆசீர்வதிக்குமாறு தமிழில் ஒரு பாதிரியார் கேட்கும் பழைய காணொளி, அவர்களின் மரணத்திற்காக அவர் பிரார்த்தனை செய்ததாகக் கூறி தவறாக வைரலாகி வருகிறது.
"இந்தியாவின் பிரதமர் அலுவலகத்திற்கு எதிராக உயிருக்கு ஆபத்தான முழக்கத்தில் ஈடுபட்டுள்ள இந்த தேவாலயத்திலிருந்து அனைவரையும் கைது செய்யுங்கள் - இயேசு, தயவுசெய்து நரேந்திர மோடி, அமித் ஷா, நிர்மலா சித்தாரமன், மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியவற்றைக் கொல்லுங்கள். இயேசுவே, அயோத்தி ராம் ஆலயத்தை அழித்து ஒரு தேவாலயத்தை கட்டுவதற்கான பலத்தை தாருங்கள்,’ என்ற கூற்றுடன் இந்த காணொளி வைரலானது.
இந்த காணொளியை சரிபார்க்க கோரி, எங்களின் உதவி எண்ணுக்கு (7700906588) அனுப்பிவைக்கப்பட்டது.
இது அரசியல் தலைவர்கள் உயிருக்கும், தேசிய பாதுகாப்புக்கும் நேரடி அச்சுறுத்தலையை ஏற்படுத்தும் என்று கோரி, உத்தரப்பிரதேச காவல்துறையினர் மற்றும் என்.ஐ.ஏ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இந்த கூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மைச் சரிபார்ப்பு
கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த காணொளி வைரலாகியிருப்பதாக பூம் கண்டறிந்தது. அதே கூற்றுடன் இந்த காணொளி பேஸ்புக் மற்றும் எக்ஸ் தளத்தில் மீண்டும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் பகிரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் பிற அரசியல் தலைவர்களுக்காக பாதிரியார் ஆசீர்வாதம் கேட்கிறாரே தவிர, அவர்களை கொல்ல வேண்டும் என்று பிரார்த்தனை செய்யவில்லை என்பதையும் நாங்கள் சரிபார்த்தோம்.
நாங்கள் இந்த காணொளியை ஆராய்ந்தபோது, இது ஒரு சுவிசேஷ தேவாலயத்தில் நடக்கும் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தைக் காட்டுகிறது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. காணொளியில் உள்ள பாதிரியார் தமிழில் பேசுவதையும், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, சீதாராமன் மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பெயரை குறிப்பிடுவதை சரிபார்க்கமுடிந்தது.
இதன் ஆடியோ பகுதியை மட்டும் நாங்கள் தனியாக பிரித்தெடுத்தோம். அதில், பாதிரியார் ’தொடுங்க’ மற்றும் "தொடுங்கப்பா" என்ற வார்த்தைகளை அவர்களின் பெயர்களுக்கு பின் பல முறை பயன்படுத்துவதை பூம் கண்டறிந்தது. தமிழில், ’தொடுங்க’ என்பதன் பொருள் ‘தொடுதல்’ ஆகும். இது தமிழில் கொல்லுங்கள் என்ற சொல்லின் ஒலிப்பு ரீதியாக மிகவும் ஒத்திருந்தது.
ஆடியோவின் பிரித்தெடுக்கப்பட்ட பகுதியை கீழே கேட்கலாம்:
அடுத்து, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள பாதிரியார்களை பூம் தொடர்பு கொண்டது. அவர்கள் வைரலான கூற்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று கூறினர். குறிப்பாக, தென்னிந்தியாவில் உள்ள சுவிசேஷ தேவாலயங்கள் நடத்தும் பிரார்த்தனைக் கூட்டங்களில் தொடுங்கப்பா என்பது பொதுவான பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படும் சொல் என்பதை பாதிரியார்கள் உறுதிப்படுத்தினர்.
வைரல் காணொளியில் உள்ள பாதிரியார் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஆசீர்வாதம் கேட்கிறார் என்று அவர்கள் பூமிடம் தெரிவித்தனர். குறிப்பாக, பிரதமர் மோடி உட்பட நான்கு அமைச்சர்களுக்கு அவர் ஆசீர்வாதம் கேட்கிறார் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதைப் பயன்படுத்தி முழு காணொளியை நாங்கள் கேட்டோம். பாதிரியார் இப்படியாக பிரார்த்தனை செய்கிறார். - ”எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்களை இரட்சியுங்கள், பிரதமர் மோடியை தொடுங்க, அமித்ஷாவை தொடுங்க, நிர்மலா சித்தராமன் தொடுங்கப்பா, மு.க.ஸ்டாலினை தொடுங்கப்பா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொடுங்கப்பா. அயோத்தியில் ஜீவன் உள்ள தேவன் இயேசு என்பதை நிருபிச்சு காட்டுங்கப்பா”
இந்த பிரார்த்தனையில், பாதிரியார் வேண்டுதலின் முழு வடிவத்தை பூம் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை என்றாலும், அவர் அரசியல் தலைவர்களின் மரணத்திற்கு பிரார்த்தனை செய்யவில்லை என்றும், அவர்களை ஆசிர்வதிக்க கோரி வேண்டுதல் செய்தார் என்பதை நாங்கள் சரிபார்த்தோம்.