சமூக வலைதளத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் மாட்டிறைச்சி வெட்டப்படுவதாக பரவும் காணொளியில் உண்மையல்ல என்றும், அது கோவில் அன்னதானத்திற்காக நேர்த்திகடன் செய்யப்பட்ட ஆடு எனவும் பூம் கண்டறிந்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மாட்டிறைச்சி வெட்டப்படுவதாக கூறி ஒரு காணொளி வைரலானது. இந்த காணொளியில், கோவில் மேற்கு கோபுரம் அருகே உள்ள ஒரு குடியிருப்பின் மாடியில், இரண்டு இறைச்சிகள் சுத்தம் செய்யப்படும் காட்சி இடம்பெற்றிருந்தது. அதில் இந்த கோவில் அருகே, ”இறைச்சி வெட்டுகிறார்கள்; அது ஆடா, மாடா என்று தெரியவில்லை. கோவிலுக்கு மிக அருகில் இப்படி செய்கிறார்கள்,” என்று இந்தியில் ஒருவர் பேசுகிறார். Voice of Hindus என்ற X கணக்கில் பதிவிடப்பட்ட இந்த காணொளியுடன், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
மற்றோரு எக்ஸ் பயனர், ”மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மிக அருகில் இரவு நேரங்களில் மாடுகளை வெட்டும் மர்ம கும்பலுக்கு யார் அனுமதி கொடுத்தது. அவர்களே இந்துக்கள் பாவத்தை சேர்த்து கொண்டே போகாதீர்கள்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த காணொளியில் இருப்பவர் மதுரைச் சேர்ந்த சாமியாடி சிவராமன் என்று பூம் கண்டறிந்தது.
உண்மைச் சரிபார்ப்பு
இதனைத் தொடர்ந்து, இந்த காணொளியின் உண்மைத்தன்மையை பூம் சரிபார்த்தது. இதில் இருப்பது மாட்டிறைச்சியா அல்லது ஆட்டிறைச்சியா என்பதை கண்டறிய, சிவராமனை தொடர்பு கொண்டோம்.
எங்களிடம் சிவராமன் சார்பாக பேசிய அவரது மனைவி (பெயர் வெளியிட விரும்பவில்லை), “நாங்கள் இதை காலங்காலமாக அன்னதானத்திற்காக செய்துவருகிறோம். அதற்காக ஆட்டிறைச்சியை அவர் (சிவராமன்) சுத்தம் செய்தார்.” என்றார்.
இவர் ஆண்டுதோறும் பக்தர்கள் தரும் காணிக்கையில் ஆடுகளை வெட்டி அன்னதானம் வழங்குவது வழக்கம்.
தொடர்ந்து இவரது மனைவி பேசுகையில், “இதுகுறித்து கடந்த மூன்று நாட்களாக தவறான வதந்தி பரவி வருகிறது. இது வழக்கமாக நாங்கள் செய்யும் அன்னதானம்,” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து, நியூஸ்செக்கர் தளம் முதலில் உண்மை சரிபார்ப்பு செய்தது.