
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அவர்களில் ஒருவரை இழுத்து, அடித்து நிர்வாணமாக விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது என்ற பொய்யான தகவலுடன் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
”இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு துரோகம் செய்த தலைவர்கள் வண்டியில் இருந்து கீழே தள்ளப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, அடித்து, ஓட விடப்பட்டனர். இ.வி.எம் மெஷினால்தான் இவர்களுக்கு 400 கிடைத்தது. இல்லையெனில், இவர்களுக்கு 40 சீட்கள் கூட கிடைத்திருக்காது.” என்ற தகவலுடன் இந்த வீடியோ பகிரப்பட்டது.
இந்த வீடியோ பதிவு, சமீபத்தில் பூமின் வாட்ஸ்அப் டிப்லைன் எண்ணுக்கு (7700906588) அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க கோரி அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த வீடியோ கடந்த 2024ஆம் ஆண்டு வைரலான போது, பூம் அதன் உண்மைத்தன்மையை சரிபார்த்து இருந்தது. அதன்மூலம், இது கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒடிசாவின் பலங்கிரில் பாஜக தலைவர்களுக்கு இடையே நடந்த மோதல் என்பதைக் கண்டறிந்தோம்.
இந்த வீடியோ, வைரலான பதிவை இங்கே பார்க்கலாம். நாங்கள் இந்த வீடியோவில் கீழ் உள்ள கருத்துக்களைப் பார்த்தோம். இந்த சம்பவம், ஒடிசாவில் நடந்தது என்று ஒரு பயனர் சுட்டிக்காட்டியதைக் கவனித்தோம்.
இந்த தகவலைக் கொண்டு, அதற்கு தொடர்பான சொற்கள் மூலம் நாங்கள் இணையத்தில் தேடினோம். கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, கலிங்கா டிவி வெளியிட்ட உள்ளூர் செய்தி அறிக்கை ஒன்றில், இதே போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த சம்பவம் ஒடிசாவில் ஆர்.டி.ஒ சௌக் பகுதியில் நடந்துள்ளது என்று அந்த செய்தி அறிக்கை தெரிவித்தது.
இந்தப் பகுதியில், பாஜகவின் ஒடிசா மாநில தலைவர் மன்மோகன் சமல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சங்கீதா சிங் தியோ ஆகியோர் பேரணியில் ஈடுபட்டிருந்தபோது, அக்கட்சி உறுப்பினர்களான ஆனந்த் தாஸ் மற்றும் பல்ராம் சிங் யாதவ் ஆகிய இருவரும் அவர்களுக்கு மலர்க்கொத்து வழங்க முயன்றதாக அறிக்கை கூறியது. அப்போது, பாஜகவின் மற்றொரு உறுப்பினர் கோபால்ஜி பாணிக்ராஹி என்பவர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதாக செய்தி கூறுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது என்று தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம், ஒடிசா பைட்ஸ் மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றிலும் செய்தியாக வெளியாகியுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து, கோபால்ஜி பாணிக்ராஹி காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார். மேலும், இந்த சம்பவம் நடந்ததாக துணைப்பிரிவு காவல் அதிகாரி (SDPO) டோஃபன் பாக் உறுதிப்படுத்தினார்.