விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியதாக கூறப்படும் காணொளி ஒன்று வைரலானது. ஆனால், அது கடந்த 2024ஆம் ஆண்டு அவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்த பழைய காணொளி என்று பூம் கண்டறிந்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம், புட்ச் வில்மோர் என்பவருடன் சேர்ந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எட்டு நாள் பயணம் மேற்கொண்டார். ஆனால், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அவர்கள் இருவரும் ஒன்பது மாதங்கள் அங்கு தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர், இவர்கள் மார்ச் 19ஆம் தேதி பூமிக்கு திரும்பினார்கள்.
இந்த காணொளியில், சுனிதா வில்லியம்ஸ் சந்தோஷத்தில் துள்ளி குதித்து, சக ஊழியர்களுடன் கொண்டாடுகிறார். சுமார் 24 நொடிகள் நீளும் இந்த காணொளியை, “சுனிதா சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பினார்,” என்று இந்தியில் எழுதப்பட்ட கருத்துடன் வைரலானது.
இந்த பதிவு இன்ஸ்டாகிராமிலும் பரவலாக பகிரப்பட்டது.
உண்மைச் சரிபார்ப்பு
இந்த பதிவின் உண்மைத்தன்மை சரிபார்க்க, இந்த காணொளியில் உள்ள சில பிரேம்களை எடுத்து, நாங்கள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம்.
இந்த தேடுதல், சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்தார் என்ற செய்திக்கு கொண்டுச் சென்றது. இந்த செய்தி ’பிஸ்னஸ் டூடே’ என்ற ஆங்கில இணையதளத்தில் வெளியாகி இருந்தது.
இந்த செய்தியுடன், Boeing Space என்ற அதிகாரப்பூர்வமான எக்ஸ் கணக்கில், வைரலான காணொளி கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதியன்று பகிரப்பட்டிருந்தது. இந்த பதிவு, ”சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்தை வந்தடைந்தனர்” என்ற தகவலுடன் இருந்தது.
சுனிதா வில்லியம்ஸ் இந்த ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி பூமிக்கு திரும்பினார். இதன்மூலம், இந்த காணொளி ஓர் ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்டது என்றும், இது அவர் பூமிக்கு திரும்பும் காணொளி அல்ல எனவும் உறுதிச்செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த காணொளி குறித்து பூம் ஆராய்ந்தப்போது, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்திலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் வந்தடைந்தவுடன் சுனிதா வில்லியம்ஸ் நடனமாடினார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.