மகா சிவராத்திரியன்று புலிகளுக்கு அசைவ உணவு கொடுத்த உயிரியல் பூங்கா மீது ஏபிவிபி தாக்குதல் என்ற செய்தி ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான கேலிச்செய்தி என்று பூம் கண்டறிந்துள்ளது.
எக்ஸ் தளத்தில், ஒரு பயனர், இந்த தாக்குதல் பற்றின செய்தியை, “அடப்பாவிகளா...🥺🥺🥺ஏபிவிபி சங்கிகள் சிவராத்திரியன்று புலிகளுக்கு அசைவ உணவு வழங்கியதாக கூறி மிருகக் காட்சி சாலையைத் தாக்கினர்.இதெல்லாம் உலகில் வேறு எங்காவது நடக்குமா...சங்கி முட்டாள்கள் இயற்கைக்கு எதிரானவர்கள்.” என்ற கருத்துடன் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் தளத்தில் வைரலாக பரவியது.
உண்மைச் சரிபார்ப்பு
இந்த செய்தியின் உண்மைத்தன்மையை கண்டறிய, இந்த புகைப்படத்தை ஆராய்ந்தோம்.
அப்போது, இடதுபுறத்தில், “This might be satire” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, “இது கேலிக்காக இருக்கலாம்” என்பது அதன் அர்த்தம்.
செய்தித்தாள் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருந்த புகைப்படத்தின், “The Savala Vada” என்று பெயர் தலைப்பாக இருந்தது. இந்த பெயரைக் கொண்டு கூகுளில் தேடினோம்.
அது எங்களை இந்த பெயர்க் கொண்ட ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு கொண்டு சென்றது. இந்த பக்கத்தில், இந்த புகைப்படத்தையும், அதனுடன் நகைச்சுவையாக எழுதப்பட்ட ஒரு செய்தியையும் பூம் கண்டறிந்தது.
இந்த பக்கத்தைப் பற்றின விவரத்தில், Satire/Parody என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம், இந்த இன்ஸ்டாகிராம் பக்கம், கேலிச் செய்திகளை பதிவிடும் பக்கம் என்பதை கண்டறிந்தோம். இந்த பக்கத்தில் உள்ள மற்ற பதிவுகளும் இதேப் போல் அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட கேலிச்செய்திகள் பதிவிடப்பட்டுள்ளன.
இந்த கேலிச்செய்தி எந்த நிகழ்வையொட்டி உருவாக்கப்பட்டது என்று தேடியபோது, மகா சிவராத்திரியன்று டெல்லி ஒரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு வழங்கப்பட்டதை அடுத்து எஸ்.எஃப்.ஐ மாணவர்களுக்கும், ஏபிவிபி மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது என்ற செய்தி வெளியாகியிருந்தது.
இந்த செய்தியை கொண்டு, thesavalavada பக்கத்தில், புலிகளுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டதற்கு உயிரியல் பூங்கா மீது ஏபிவிபி தாக்குதல் நடத்தியதாக கேலிச்செய்தி உருவாக்கப்பட்டுள்ளது.