வட இந்தியாவில் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே கம்பங்கள் வைத்திருப்பதாக பரவிய காணொளி, இந்தியாவில் எடுக்கப்படவில்லை என்று பூம் கண்டறிந்துள்ளது.
இந்த காணொளியில், ஒரு ரயில் தண்டவாளத்திற்கு இடையே கம்பங்கள் இருப்பதை ஒருவர் புகைப்படம் பிடிப்பதையும், இந்த நிகழ்வை கேலி செய்யும் விதமாக சில மீம்களும் சேர்க்கப்பட்டுள்ளன. எக்ஸ் தளத்தில் இந்த காணொளியைப் பகிர்ந்த ஒரு பயனர், “இந்திய ரயில்வே துறையை மொத்தமா முடிச்சிட்டானுங்க; வட இந்தியாவில் தான் இந்த கேவலம்”, என்ற கருத்துடன் பகிர்ந்தார்.
ரஷ்ய மொழியில் இருந்த செய்தியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாங்கள் பார்த்தோம். அப்போது, அந்த செய்தியின் தலைப்பு, ”ரஷ்யாவில், தண்டவாளங்களுக்கு இடையில் நிறுவப்பட்ட ரயில் கம்பங்கள்” என்று இருந்தது. மேலும், உக்ரேனிய ஆயுதப்படை அதிகாரி அனடோலி ஸ்டீபன் (Anatoliy Stefan) இந்த காணொளியைப் பகிர்ந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காணொளி குறித்து மேலும் தேடுகையில், போலாந்து நாட்டைச் சேர்ந்த sadistic.pl என்ற இணையதளத்திலும், இந்த காணொளி பகிரப்பட்டுள்ளது. இந்த காணொளி கீழே சில கமெண்ட்களை ஆராய்ந்தோம். அதில், இது ரஷ்யாவில் உள்ளது என்ற சில கமெண்ட்கள் இருந்தன.
இந்த தண்டவாளம் ரஷ்யாவில்தான் உள்ளதா என்று பூம் சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை என்றாலும், இது இந்தியாவில் இல்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.