ஆழப்போலி: அருணாச்சலத்தில் கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் என்று டிரம்ப் குற்றம்சாட்டிய வீடியோ
டிரம்ப் அத்தகைய உரையை நிகழ்த்தியதாக எந்த நம்பகமான செய்தி அறிக்கைகளும் இல்லை என்று பூம் கண்டறிந்தது.



அருணாச்சலப் பிரதேசத்தில் கலவரத்தை தூண்டிவிட்டதாகவும், அங்கிருக்கும் டானி பழங்குடியினரிடையே மோதலைத் தூண்டியதற்காகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டும் ஒரு காணொளி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ ஓர் ஆழமான போலித்தன்மையுடன் உருவாக்கப்பட்டது என்று பூம் கண்டறிந்துள்ளது. AI மூலம் மாற்றிமைக்கப்பட்ட வீடியோவில் பல முரண்பாடுகள் உள்ளன. மேலும், AI பயன்பாட்டை கண்டறியும் கருவிகளும் இந்த வீடியோ ஆழமான போலித்தன்மையைக் கொண்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
அருணாச்சலப் பிரதேசத்தில் பழங்குடி நம்பிக்கை கொண்டவர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்கள் என மூன்று முக்கிய சமூகங்கள் உள்ளன. மாநிலத்தின் குறிப்பிடத்தக்க பழங்குடியினரில் ஒன்றான டானி மக்கள், சூரியனையும் (டோனி) சந்திரனையும் (போலோ) வழிபடுபவர்கள்.
இந்த வைரல் வீடியோ மூன்று நிமிடம் 20 நொடிகள் கொண்டது. இதில், டோனி போலோ சமூகத்தில் உள்ள சில நபர்கள் அரசியல் நோக்கங்களுக்காக தங்கள் அடையாளத்தையும் நம்பிக்கையையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு விற்று வருவதாகவும், இச்சட்டத்தைப் பயன்படுத்தி கிறிஸ்தவ டானி மக்களிடையே மோதலைத் தூண்டுவதாகவும் டிரம்ப் கூறுவது போல இருக்கிறது. டானி மக்களிடையே பிரிவினையை உண்டாக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உதவ பணம் பெற்றவர்களை அடையாளம் காணவும் அவர் வலியுறுத்துகிறார்.
இந்த காணொளி ஆங்கிலத்திலும் தமிழிலும் பகிரப்பட்டு வருகிறது.
தமிழில், “அமெரிக்க அதிபர் ட்டிரம்ப் உலக மக்களுக்கு மிகத்தெளிவாக கூறியுள்ள தகவலை நம் இந்தியர்கள் ஒவ்வொருவரும் கேளுங்கள்,” என்ற கருத்துடன் பகிரப்பட்டு வருகிறது.
உண்மைச் சரிபார்ப்பு
இந்த வீடியோவில் டிரம்ப் பேசியதைப் பற்றி தெரிந்துகொள்ள, கூகுளில் ஒரு சில முக்கிய வார்த்தைகள் கொண்டு பூம் தேடியது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பற்றியோ அல்லது அருணாச்சல பிரதேசத்தைப் பற்றியோ டிரம்ப் பேசியதாக எந்த நம்பகமான செய்தி அறிக்கைகளையும் பூம் கண்டுபிடிக்கவில்லை.
பின்னர், வீடியோவில் டிரம்பின் உரையை உன்னிப்பாக பூம் ஆராய்ந்தது. அதன் ஆடியோவுக்கும் டிரம்பின் உதடு அசைவுகளுக்கும் இடையில் பல முரண்பாடுகள் இருந்தன. மேலும், வீடியோவில் அவரது உரையின் போது, திடீரென மாறும் பல காட்சிகள் உள்ளன. அப்போது, அவரின் குரலில் எந்த மாற்றங்களும் இல்லை.
வைரல் வீடியோவில் உள்ள ஆடியோவுக்கும் டிரம்பி உதடு அசைவுகளுக்கும் தொடர்பு இல்லை என்பதை கீழே காட்டப்பட்டுள்ளது.
வீடியோவின் வெவ்வேறு காட்சிகளை எடுத்து, AI-யைக் கண்டறியும் கருவியான Hive Moderation-இல் பூம் சரிபார்த்தது. இது அந்த வீடியோ AI மூலம் மாற்றியமைக்கப்பட்டதாக காட்டியது.
