வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு ஓவைசி அழுவதாக கூறுவது போலியான தகவல்
இந்த வைரல் காணொளி 2024 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை பூம் கண்டறிந்துள்ளது.



வக்ஃப் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, ஹைதராபாத் மக்களவை உறுப்பினரான அசாதுதீன் ஓவைசியின் காணொளி மற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதனுடன், மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு அசாதுதீன் ஓவைசி உணர்ச்சிவசப்பட்டதாக சமூக வலைதளத்தில் பரவியது.
வைரலான காணொளி கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று மக்களவையில் நிதி (எண்.2) மசோதா, 2024 மீதான விவாதத்தின் போது எடுக்கப்பட்டது என்பதை பூம் கண்டறிந்தது. பீகார் மாநிலம் பூர்ணியா நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவ் உரையாற்றும்போது, அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த ஓவைசி தனது கண்ணாடியைக் கழற்றிவிட்டு, நெற்றியையும் கண்களையும் கைகளால் துடைத்து கொண்டிருப்பதைக் காணலாம்.
எதிர்ப்புகள் மற்றும் விவாதங்களுக்கு மத்தியில், வக்ஃப் திருத்த மசோதா, 2025, நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போது அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதேப் போன்ற பதிவு, எக்ஸ் தளத்திலும் பகிரப்பட்டது.
உண்மைச் சரிபார்ப்பு
வக்ஃப் திருத்த மசோதா மக்களவை விவாதத்திற்குப் பிறகு, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதியன்று நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின.
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அசாதுதீன் ஒவைசி மக்களவையில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றினார். மக்களவையில் வக்ஃப் தொடர்பான விவாதத்தின் போது, வைரலான வீடியோவில் காணப்படும் உடையில் அவர் காணப்படவில்லை. இதனால் அந்த காணொளி பழையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது.
வைரலான காணொளியைச் சரிபார்க்க, காணொளியின் சில முக்கிய பிரேம்களை எடுத்து நாங்கள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம். இந்த தேடலின் போது, கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று ஏஐஎம்ஐஎம் இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்ட ஒரு காணொளியை கண்டோம்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது, ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மீதான வரி குறித்த கேள்வியை அசாதுதீன் ஓவைசி எழுப்பியதாக அதன் காப்ஷனில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த தகவலை கண்டறிந்த பிறகு, கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று, சன்சாத் டிவியின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட நேரடி ஒளிபரப்பு காணொளியை நாங்கள் ஆராய்தோம். அப்போது வைரலான காணொளியின் பகுதியை கண்டுபிடித்தோம்.
இந்த காணொளியில் 04:32 மணிக்கு, பீகார் மாநிலம் பூர்னியாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவ், 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று மக்களவையில் நிதி (எண்.2) மசோதா, 2024 மீதான விவாதத்தின் போது தனது தரப்பை முன் வைத்துக் கொண்டிருந்தார். அவரது உரையின் போது, அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த அசாதுதீன் ஓவைசி, தனது கண்ணாடியைக் கழற்றி கண்களை துடைத்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.