டெல்லியில் பிரபல இந்தி பாடலால் நின்ற திருமணம் செய்தியல்ல, ஒரு விளம்பரம்!
இந்த செய்தி உண்மையானது அல்ல எனவும், ஒரு பத்திரிகையில் அமேசானின் ஓடிடி தளமான எம்.எக்ஸ் பிளேயருக்கான விளம்பரமாக வெளியானது எனவும் பூம் கண்டறிந்துள்ளது.



டெல்லியில் பிரபல பாலிவுட் பாடலான 'சோலி கே பீச்சே' பாடலுக்கு மணமகன் நடனமாடியதால் மணமகளின் தந்தை திருமணத்தை ரத்து செய்ததாக வைரலாகும் தகவல் உண்மையில்லை.
இந்த சம்பவம், அமேசானின் ஓடிடி தளமான எம்.எக்ஸ் பிளேயரின் விளம்பரத்தின் ஒரு பகுதி என்று பூம் கண்டறிந்தது.
இந்த விளம்பரத்தில் உள்ள தகவல்கள் செய்தி எனக் கருதி, தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. தமிழில் புதிய தலைமுறை, விகடன், ஏபிபி நாடு, மாலை மலர், டைம்ஸ் நவ் செய்தி, தமிழ் முரசு ஆகிய ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன.
ஆங்கில ஊடகங்களான தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தி எக்னாமிக் டைம்ஸ், மின்ட் இந்த விளம்பரத்தை, டெல்லியில் நடந்த சம்பவம் என வெளியிட்டன.
இந்த செய்தி வைரலானது ஒருபுறம் இருக்க, விளம்பரத்தின் புகைப்படமும் வைரலானது. அதில், ‘சோலி கே பீச்சே’ பாடலுக்கு விருந்தினர்களை உற்சாகப்படுத்த மணமகன் ஆடினார். மணமகளின் தந்தை திருமணத்தை நிறுத்தினார்.” என்று தலைப்பு குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து, ஒரு செய்தி அறிக்கைப்போல் வடிவமைக்கபட்ட இந்த விளம்பரத்தில், மணமகன் அப்பாடலுக்கு நடனமாடியதால், மணமகளின் தந்தை தனது குடும்ப வழக்கத்திற்கு இது மாறானது என்று கோபமடைந்தார். மணமக்களின் வேண்டுகோளை மீறி இந்த திருமணத்தை நிறுத்தினார் என விளம்பரம் செய்திப் போல் வெளியிடப்பட்டிருந்தது.
உண்மை சரிபார்ப்பு
இந்த சம்பவம் உண்மையில் நடக்கவில்லை என்றும், இது அமேசானின் எம்.எக்ஸ் பிளேயருக்கான விளம்பரம் எனவும் பூம் கண்டறிந்தது.
செய்தி அறிக்கைகளில் ஆதாரமாகக் குறிப்பிடப்பட்டுள்ள வைரல் புகைப்படத்தை நாங்கள் பகுப்பாய்வு செய்தோம். அதில் அது ’தி பயனீர்’ பத்திரிகையின் டெல்லி பதிப்பின் புகைப்படம் என்பதைக் கண்டறிந்தோம்.
பின்னர் நாங்கள் அப்பத்திரிகையின் மின்-பதிப்பைப் பார்த்தோம். அது இந்த ஆண்டு ஜனவரி 30ஆம் தேதியன்று பத்திரிகையில் வெளியிடப்பட்டது என்பதைக் கண்டறிந்தோம்.
வைரலான இந்த புகைப்படத்தில் காணப்படும் பிற செய்திகளின் பகுதிகள், அன்றைய தேதியில் மூன்றாம் பக்கத்தில் வெளியிடப்பட்டவற்றுடன் ஒத்துப்போகின்றன.
மேலும், வைரலான செய்தியின் வடிவம் மற்றும் பாணியிலும் அதே பக்கத்தில் வெளியிடப்பட்ட பிற செய்திகளின் வடிவம் மற்றும் பாணியில் முரண்பாடுகளைக் கவனித்தோம்.
1. செய்தி எழுதியவரின் பெயர் இல்லை
மற்ற செய்தி அறிக்கைகளைப் போல் இல்லாமல், இந்த செய்தி அறிக்கையில் அதை எழுதியவர் பெயர் இல்லை என்பதை நாங்கள் கவனித்தோம்.
பொதுவாக பத்திரிகையில் தலைப்புக்குக் கீழே, பத்திரிகையாளர், எழுத்தாளர் அல்லது ஊடக நிறுவனத்தின் பெயர் இருக்கும். இந்தச் செய்தி, அப்பத்திரிகையின் அதே பதிப்பின் மற்ற செய்தி அறிக்கை அல்லது தொகுப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். மற்ற செய்திகளில் 'செய்தியாளர்' அல்லது 'பயனீர் செய்திச் சேவை' என்பதற்கான பெயர் இருந்தாலும், இந்தச் செய்தியில் அத்தகைய பெயர் இல்லை.
2. எழுத்துரு பாணியில் உள்ள வேறுபாடு
அப்பத்திரிகையில் வெளியான விளம்பரத்தின் எழுத்துரு பாணியை, அதன் மற்ற செய்திகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். இதில், விளம்பரச் செய்தியின் தலைப்பில் ஒரு முற்றுப்புள்ளி சேர்க்கப்பட்டது உட்பட பல வேறுபாடுகளைக் கண்டறிந்தோம்.
"மணமகன் தனது விருந்தினர்களை உற்சாகப்படுத்த 'சோலி கே பீச்சே' பாடலுக்கு நடனமாடுகிறார். மணமகளின் தந்தை திருமணத்தை ரத்து செய்தார்" என்ற போலி செய்தி அமேசான் எம்எக்ஸ் பிளேயரின் விளம்பரம் உள்ள அதே பகுதியில் வெளியிடப்பட்டுள்ளத்தையும் நாங்கள் கவனித்தோம். மற்ற செய்திகள் இந்த வடிவமைப்புக்கு மேலே இருப்பதை நீங்கள் கீழே பார்க்கலாம்.
3. எழுத்து நடையில் வேறுபாடு
மேலும், இந்தப் போலிச் செய்தி, அப்பத்திரிகையின் மற்ற செய்தி அறிக்கைகளில் உள்ள அதே எழுத்து நடையைப் பயன்படுத்தவில்லை என்பதையும் நாங்கள் கவனித்தோம்.
உதாரணமாக, ‘தி பயனீரில்’ உள்ள மற்ற செய்திகளைப் போல் இல்லாமல், இந்த விளம்பரத்தில் குறிப்பிட்ட தேதி, ஜனவரி 18 என எழுதப்பட்டிருக்கிறது.
மேலும், இதுகுறித்து நாங்கள் டெல்லியில் உள்ள ‘தி பயனீர்’ பத்திரிகையின் விளம்பரம் மற்றும் விற்பனைத் தலைவர் பருண் குமார் செளத்ரியைத் தொடர்புக் கொண்டு பேசினோம். அவர் இது ஒரு விளம்பரம் என்பதை உறுதிச் செய்தார். அவர் பூம் தளத்திடம் பேசுகையில், "இது உண்மையான செய்தி அல்ல இது ஒரு விளம்பரம். இது அமேசானின் ஓடிடி தளமான எம்.எக்ஸ் பிளேயருக்கான விளம்பரத்தின் ஒரு பகுதி’”என்று கூறினார். போலிச் செய்தியை விளம்பர அம்சமாக வேறுபடுத்தும் ஒரு மறுப்பை அறிவிப்பை நாங்கள் சேர்த்திருக்க வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
(கூடுதல் செய்தி அறிக்கை: ரோஹித் குமார்)