ஏ.டி.எம்மில் இருந்து பணம் எடுக்க கட்டணம் ரூ.2-ல் இருந்து ரூ.23ஆக உயரவில்லை
ஏ.டி.எம்மில் இருந்து பணம் எடுக்கும் கட்டணம் 2 ரூபாயிலிருந்து 23ஆக உயர்ந்துள்ளது என்ற தகவல் தவறானது என்று பூம் கண்டறிந்துள்ளது.

ஏ.டி.எம்மில் இருந்து இலவச பண பரிவர்த்தனைக்கு பின், பணம் எடுக்க கட்டணம் 21 ரூபாயிலிருந்து 23ஆக உயர்ந்துள்ளது என்பதே சரியான தகவல் என்று பூம் கண்டறிந்துள்ளது. அது இரண்டு ரூபாயில் இருந்து உயர்த்தப்படவில்லை.
எக்ஸ் தளத்தில் ஒரு கணக்கில், “மே 1 முதல் ATMல் மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.2ல் இருந்து ரூ.23ஆக உயர்வு” - RBI அறிவிப்பு” என்ற தகவல் வெளியாகி இருந்தது.
இதேப்போல், வெவ்வெறு செய்தி புகைப்படங்களிலும் இதே தகவல் வெளியாகியிருந்தது.
இதே தகவல், தந்தி டிவியின் சமூக ஊடக பக்கத்திலும் 2ல் இருந்து 23ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகி இருந்தது.
உண்மைச் சரிபார்ப்பு
இந்த தகவலின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, இந்த புகைப்படங்களை நாங்கள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம்.
இந்த தேடுதல், சன் நியூஸ் ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு செய்திக்கு கொண்டுச் சென்றது. அதில், “ATM-ல் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணத்தை ரூ.21ல் இருந்து ரூ.23ஆக உயர்த்தி அறிவித்துள்ளது RBI,” என்ற செய்தி வெளியாகியிருந்தது.
மேலும், இந்த தகவலை சரிபார்க்க குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கொண்டு தேடினோம். இது தி இந்து வெளியிட்டிருந்த செய்திக்கு கொண்டுச் சென்றது. இந்த செய்தியில், வரையறுக்கப்பட்ட இலவச பண பரிவர்த்தனையை தாண்டி ஏ.டி.எம்மில் இருந்து பணம் எடுக்க கட்டணம் ரூ.21லிருந்து ரூ.23ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என்ற செய்தியை, இரண்டு ரூபாயிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளது என்று சமூக வலைதளத்தில் பரவியது.
மேலும், இதுகுறித்து நாங்கள் கூகுளில் தேடியபோது, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றை கண்டறிந்தோம். இதில், வரையறுக்கப்பட்ட ஐந்து பணம் பரிவர்த்தனைக்கு பின்னர், வாடிக்கையாளருக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது 2025ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் வசூலிக்கப்பட்ட கட்டணம் விவரம் பற்றி நாங்கள் ஆராய்ந்தோம்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் வலைதளத்தில், தற்போது இலவச பண பரிவர்த்தனை முடிந்தபிறகு, வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.21ஆக உள்ளது என்பதை கண்டறிந்தோம். இந்த தகவலை ஆக்சிஸ் வங்கியிலும் நாம் பார்க்கலாம்.