சங்கராச்சாரியாரை காவல்துறையினர் தாக்கிய காணொளி கும்பமேளாவில் எடுக்கப்பட்டது அல்ல!
மகா கும்பமேளாவில் காவல்துறையினர் சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்தை தாக்கியதாக பகிரப்படும் காணொளி 2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று பூம் கண்டறிந்துள்ளது.

மகா கும்பமேளாவில் சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் காவல்துறையினரால் தாக்கப்பட்டார் என்று சமூக வலைதளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகிறது. இந்த காணொளி கடந்த 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று பூம் கண்டறிந்துள்ளது.
‘கும்பமேளாவுக்கு சென்ற சங்கராச்சாரியாருக்கு போலீஸ் அடி உதை’ என்ற தலைப்பு கொண்ட இந்த காணொளியில், சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் ஊடகங்களிடம் பேசிக்கொண்டிருக்கையில், அவரை காவல்துறையினர் பேசவிடாமல் விரட்டியடிக்கின்றனர்.
2015 ஆம் ஆண்டு நடந்த தடியடி
இதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க இன்விட் என்ற தளத்தைப் பயன்படுத்தி, காணொளியை கீஃபிரேம்களாக மாற்றி, ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம். இந்த தேடுதல், எங்களை 2015ஆம் ஆண்டு வாரணாசியில் துறவிகள் மீது காவல்துறை நடத்திய தடியடி செய்திக்கு கொண்டு சென்றது. ‘First India News’ என்ற செய்தி சேனல் யூடியூபில் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி பதிவேற்றப்பட்ட இந்த காட்சிகள், வைரலான அவிமுக்தேஸ்வரானந்த் காணொளி காட்சிகளுடன் ஒத்திருப்பதை பூம் கண்டறிந்தது.
விநாயகர் சிலையை கங்கை நதியில் கரைப்பது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், இந்த தடியடி சம்பவம் நடந்துள்ளது என்று செய்தி அறிக்கை கூறுகிறது. இந்த சம்பவம் குறித்து, ஆஜ் தக், டிவி5 நியூஸ், நியூஸ் 24 ஆகிய இந்தி ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன.